×

புதுவையில் பட்டப்பகலில் பயங்கரம்: திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர்-2 அழகர்சாமி கோயில் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் (59). பொதுப்பணித்துறையில் கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தார். அதிமுக பிரமுகராக இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திமுகவில் சேர்ந்தார்.  இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் மனைவி, மகள், பேரக்குழந்தைகள் இருந்தனர். பிளாங்க்ளின் வீட்டில் இல்லை. அப்போது ஒரு ஸ்கூட்டரில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒரு நபர், ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்தார்.

பின்னர், அங்கிருந்து சர்வசாதாரணமாக நடந்தே வந்து பிராங்க்ளினின் வீட்டின் மீது ஒன்றன் பின் ஒன்றாக வெடிகுண்டுகளை வீசினார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஸ்கூட்டரில் தப்பிச் சென்று விட்டனர். கதவு மூடி இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசியவர்களின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Puthuvai ,DMK , Daytime terror in Puthuvai: Bomb blast at DMK official's house
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்